Friday, November 13, 2009

என் பாதை, என் தோழி

written while I took a new path to my office, to say bye to my old path (15,16,17 October)


இரவுதோறும் எனை வழியனுப்பி, வீடேற்றி,
மறுநாள் நான் வர காத்திருந்து, என்னுடனிருக்கும்
பாதையே, நீ என் ஊமைத்தோழியே !!!
பிரிவுறும் தருணம் விடைபெற வந்தேன்.
உன் பொறுமைக்கும், இனிமைக்கும் நன்றி.

இனி என் நினைவுச்சிரிப்புகளை,
உன் ஜன்னல் விழிகள் காணாது...
நான் முணுமுணுக்கும் பாடல்கள்
உன் சுவர்ச்செவிகளைச் சேராது...
என் வேதனை பெருமூச்சுகள்
உன் சூழலை இனி சேராது..

எனினும் சில கேள்விகள் கொண்டேன்
முறையாய் பதிலுரைப்பாய்.
என் நினைவுகளை நான் பகர
எப்போதும் அமைதியாய் கேட்டு நின்றிருப்பாய்.
உண்மையாய் என் மகிழ்ச்சிகளை உணர்ந்தாயா???
என் வருத்தங்களின் ஆழம் அறிந்தாயா???
உன் மொழி யாது???
உன்னிடம் உரையாடியது, என் நினைவுகளால் மட்டுமே
எனில், பாதைகளின் மொழி, சொற்களால் அல்ல
நினைவுகளால் அமைக்கப்பெற்றதோ???
நினைவு மொழியினில் என்னிடம் ஏதும் உரைத்தனையோ???
நான்தான் நினைவுமொழிச்செவிடனோ???
கேட்க இயலாமல் போயினனோ???

நிம்மதியின் பேரமைதியே, சிறந்த உறவுகளின்
நினைவுகளில் உறைந்திருக்கும் - மகிழ்ச்சிகளோ
வருத்தங்களோ எட்டி நிற்குமென்று அறிவேன்.

நாளை மற்றொரு பாதையில் செல்கையில் ,
நம் உறவின் நினைவுகளில் உறைந்திருக்கும்
நிம்மதியின் பேரமைதியினை அதற்கு எடுத்துரைப்பேன்.
நீ உன் மொழி அறிந்த மற்றொரு பாதையிடம்,
என்னை பற்றி உரைப்பாயா???

நான் கொண்ட அசட்டுக்கேள்விகளுக்கு
பதிலளிப்பாயா?? அல்லது உலகின் பதிலளிக்கப்படாத
கேள்விகளின் கூட்டணியில் இவை சேருமா???